கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 31 டிசம்பர், 2011

16,549 பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமனம் பாளை.,யில் 2,800 பேருக்கு 3ம் தேதி "இன்டர்வியூ' ஆரம்பம்

நெல்லை மாவட்டத்தில் 395 பணியிடங்களுக்கு 2,800 பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு பாளை.,யில் வரும் 3ம் தேதி முதல் "இன்டர்வியூ' ஆரம்பமாகிறது.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தையல், இசை, உடற்கல்வி ஆசிரியர், தோட்டக்கலை, ஓவியம் உட்பட பல்வேறு தொழில் கல்வி ஆசிரியர்கள் 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரிய பணியிடங்களை மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில் நிரப்ப அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் அனைத்து வட்டார வள மையங்களிலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
இந்த விண்ணப்பங்களை பெற்று அனைத்து மாவட்டங்களிலும் தகுதியானவர்கள் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இன சுழற்சி சீனியாரிட்டி பட்டியலும் பெறப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம்:

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொததம் 395 காலி ஆசிரிய பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்பட்டது. இப்பணியிடங்களுக்கு சுமர் 2,800 பேர் விண்ணப்பங்களை அளித்தனர்.இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. இவர்களுக்கு வரும் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை பாளை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரி பார்ப்பு பணி மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அழைப்பு கடிதங்களும் அனுப்பபட்டு வருகிறது.தினமும் 300 பேருக்கு சான்றிதழ் சரி பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் உடற்கல்வி நிபுணர், மாவட்ட அளவில் அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்ப இசை, கம்ப்யூட்டர், தோட்டக்கலை படிப்புகளில் நிபுணர்கள் நேர்முகத் தேர்வை நடத்துகின்றனர்.தொடர்ந்து நேர்முகத் தேர்வு முடிவுகள் பரிசீலனை செய்யப்பட்டு வரும் 16ம் தேதி முதல் இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

மதரசா சிராஜும் முனீர் 25 -ஆம் ஆண்டு ஐம்பெரும் விழா ஊர்வலக் காட்சி


மதரசா சிராஜும் முனீர் 25 -ஆம் ஆண்டு ஐம்பெரும் விழா ஊர்வலக் காட்சிகள்









பரசுராமபுரம்  வடக்குத் தெருவிலிருந்து மதரசா மாணவ மாணவிகளின் ஊர்வலமாக புறப்பட்டு பரசுராமபுரம் தெரு, கல்வத் நாயகம் தெரு, கல்வத்து நாயகம் சன்னதி தெரு, புதுத்தெரு பஜார் வழியாக பரசுராமபுரம் நெய்னா முஹம்மது பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.

கடையநல்லூரில் கல்வத்து நாயகம் தெரு பகுதியில் படையெடுத்து வந்த பாம்புகளால் பரபரப்பு

கடையநல்லூரில் படையெடுத்து கும்பல் கும்பலாக பலவகையான பாம்புகள் பாம்பாட்டிகளின் மகுடிக்கு இசைந்து வெளியே வந்ததால் பொதுமக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். சுமார் 40க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டன.கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் முட்புதர்கள், குப்பைகள் அதிகளவில் உள்ளன. தனியாருக்கு சொந்தமான சில இடங்கள் பல ஆண்டுகள் பராமரிக்கப்படாமல் இருப்பதால் அப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.கடையநல்லூர் நகராட்சி 11வது வார்டு கல்வத்து நாயகம் தெரு பகுதியை ஒட்டி அமைந்துள்ள மனை ஒன்றில் பாம்புகள் அதிகளவில் குடியிருப்பதாக புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பாம்புகளை பிடிக்க பாம்பாட்டிகள் வரவழைக்கப்பட்டனர். நேற்று காலை சுமார் 9 மணி முதல் பாம்பாட்டிகள் மகுடியை இசைத்த வண்ணம் இருந்தனர்.

அடுத்த 5 நிமிடத்தில் மகுடிக்கு இசைந்த சாரைப்பாம்பு ஒன்று தலை காட்டவே, அதனை தங்களுக்கே உரித்தான முறையில் பாம்பாட்டிகள் பிடித்தனர். தொடர்ந்து பாம்பாட்டிகள் ஒன்றுபட்டு மகுடி இசைக்க அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடையும் வகையில் நல்ல பாம்பு, சாரைப்பாம்பு, உள்ளிட்ட பாம்புகள் வரிசையாக படம் எடுத்து மகுடிக்கு ஏற்ப அந்த மனைப் பகுதியிலிருந்து வெளிவர துவங்கின. பாம்புகள் அதிகளவில் படம் எடுத்து வந்த நிலையில் அதனை ஒவ்வொன்றாக பிடித்தனர்.இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்ததும் கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். இந்நிலையில் பாம்பாட்டிகள் மகுடிகள் மூலம் அந்த பகுதியில் சுமார் பல்வேறு ரகங்களை கொண்ட 40 பாம்புகளை பிடித்தனர்.மாவடிக்கால் பகுதியில் சுமார் 3 மணிநேரத்தில் 40 பாம்புகள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதட்டத்தையும், பீதியையும் மட்டுமின்றி பார்வையாளர்கள் முகத்தில் பெரும் பயத்தையும் காண முடிந்தது.

2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத்தாவுக்கு முதலிடம்!

2011-ம் ஆண்டு சினிமா உலகத்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. 

2010-ம் ஆண்டு வெளியான ரஜினியின் எந்திரன் தாக்கமே 2011 முதல் காலாண்டு வரை பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்தது. 

இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலித்து வாய் பிளக்க வைத்துவிட்டதால், அதன் பிறகு வெளியான பல நடிகர்களின் படங்களுடைய வர்த்தக எல்லை, அளவு பற்றிய எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்தது. 

ஆனால் ஒரு படம் கூட அதில் கால்வாசியைக் கூட தொடவில்லை என்பதுதான் பரிதாபம். ஆனால் விளம்பரங்களில் எந்திரனுக்கு நிகராக அல்லது எந்திரனுக்கு அடுத்து என போட்டு பீற்றிக் கொண்ட காமெடி அரங்கேறியது!

ஹாலிவுட் போல உண்மையான வசூல் விவரங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள கோலிவுட்டில் வழியில்லை. நஷ்டம் என்றாலும் அதை கவுரமாக லாபம் அல்லது சாதனை என்று கூறும் போக்கு, வீம்புக்காக மகாலட்சுமி அல்லது கோபிகிருஷ்ணாவில் 250 நாட்கள் ஓட்டிக் காட்டும் வழக்கமும் இங்கு தொடர்வது.

இதையெல்லாம் தாண்டி, பளிச்சென்று வெற்றிப் படங்களாக தெரிந்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.

1. மங்காத்தா

அஜீத் - அர்ஜுன் - த்ரிஷா - லட்சுமிராய் - ப்ரேம்ஜி என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படம் எனலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரே படம் மங்காத்தா. வசூல் என்று பார்த்தால் ரூ 130 கோடி என்று கூறப்பட்டது. 

ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற, எந்த ஆதாரமும் தரப்படாமல் தயாரிப்பாளரால் சொல்லப்பட்ட விவரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அஏஜீத், யுவன் சங்கர் ராஜா, எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் அவற்றைக் கவனிக்கவிடாமல் பார்த்துக் கொண்ட வெங்கட் பிரபுவின் இயக்கம். 

2. காஞ்சனா

சின்ன பட்ஜெட்... மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் காஞ்சனா. பெரிய ஸ்டார் வேல்யூ, செட்டிங்குகள், செலவுகள் எதுவும் இல்லாமல், இன்ஸ்டன்டாக ஜெயித்த பேய்ப் படம் இது. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும் இதில் நிரூபித்திருந்தார். 

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், நகைச்சுவை மற்றும் அமானுஷ்ய காட்சிகளை இயல்பாக, சரியான விகிதத்தில் அமைத்திருந்தது. குறிப்பாக கோவை சரளா!

3 கோடி செலவு, ரூ 30 கோடிக்கு மேல் லாபம், பிற மொழி உரிமையாக மட்டுமே பல கோடிகளைப் பெற்றது என, காஞ்சனா ஒரு உண்மையான 'ப்ளாக்பஸ்டர்' என்றால் மிகையல்ல.

3. எங்கேயும் எப்போதும்

எதிர்பாராமல் ஜாக்பாட் அடிப்பது என்பார்களே, அது இந்தப் படத்துக்குப் பொருந்தும். புதிய இயக்குநர், பெரிதாக மார்க்கெட் இல்லாத நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ ஆர் முருகதாஸ் - ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது. 

அந்த மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவு கதை-திரைக்கதை வித்தியாசமாக அமைந்ததால், நல்ல வெற்றியைப் பெற்றது படம். மிகக் குறைந்த முதலீட்டில் வெளியாக, பெரிய லாபத்தைப் பெற்ற இந்தப் படம், நூறாவது நாளையும் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

4. கோ

ஜீவா - கார்த்திகா நடிப்பில் வெளியான படம். சொல்லப் போனால், இருவருக்குமே லைஃப் கொடுத்த படம் இது. பத்திரிகை உலகை அடிப்படையாக வைத்து கே வி ஆனந்த் இயக்கிய இந்தப் படத்திலும் நிறைய ஓட்டைகள். ஆனால், பரபரவென நகர்ந்த காட்சிகளால், அந்த ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் ரசித்தனர் மக்கள். 

படத்தின் பெரிய பலம் இயக்குநர் கே வி ஆனந்த், ஹீரோ ஜீவா. ரொம்ப அநாயாசமாக தனது பாத்திரத்தை கையாண்டிருந்தார் ஜீவா. 

5. தெய்வத் திருமகள்

விக்ரம் - அனுஷ்கா - சந்தானம் - அமலா நடித்திருந்த இந்தப் படம் ஏ எல் விஜய்யின் இன்னுமொரு வெற்றிப் படம். ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்தான் என்றாலும், விக்ரம் நடிப்பில் அதை மக்கள் மறந்தே போனார்கள்.

விக்ரமைத் தாண்டி படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானம், அனுஷ்கா. அப்புறம் அந்த அழகான குழந்தை பேபி சாரா. 

6. 7ஆம் அறிவு

இந்த ஆண்டில் பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக வெளியானது 7 ஆம் அறிவு. காரணம், ரமணா, கஜினி தந்த ஏ ஆர் முருகதாஸ் என்ற திறமையான இளைஞர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருந்த மரியாதை ப்ளஸ் நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை முதல் முறையாக இந்தப் படத்தில் தோற்கடிக்கப்பட்டது. 

படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இதையெல்லாம் தாண்டி தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் புண்ணியத்தில் இந்தப் படத்துக்கு ஏக விளம்பரங்கள். அந்த விளம்பரங்களின் தயவிலேயே படமும் ஓரளவு தாக்குப் பிடித்துவிட்டது. வசூலைப் பொருத்தவரை தயாரிப்பாளர் திருப்தி. 2011 ஹிட் படங்களில் 7-ஆம் அறிவும் இடம்பெற்றுவிட்டது.

7. வேலாயுதம்

தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த விஜய்க்கு, காவலன் சின்ன ஆறுதலைக் கொடுத்ததென்றால், வேலாயுதம் பெரிய நிம்மதியைக் கொடுத்தது எனலாம். படம் ஏற்கெனவே வந்த திருப்பாச்சியின் உல்டா, சுமார்தான் என்றாலும், சந்தானம், ஹன்ஸிகா, ஜெனிலியா என திறமையான கலைஞர்களின் பங்களிப்பால் ரசிகர்களை கவர்ந்தது. நல்ல வசூல். 

8. அவன் இவன்

இந்தப் பட்டியலில் அவன் இவனா... அது ஓடவே இல்லையே என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். அந்தப் படத்தின் வெற்றி ஓடிய நாள் கணக்கில் இல்லை. வசூல் கணக்கில்தான் இருக்கிறது!

விஷாலுக்கு நல்ல பெயர், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு நல்ல லாபம், குறிப்பாக அதன் தெலுங்கு பதிப்பு மட்டுமே ரூ 17 கோடியை வசூலித்ததாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையான இழப்பு பாலாவுக்கு மட்டும்தான். பணமல்ல, இத்தனை படங்களில் அவர் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்!

9. காவலன்

விஜய்யின் 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த படம் காவலன். சுமாரான வெற்றிதான் என்றாலும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு லாபத்தைத் தந்தது இந்தப் படம். வடிவேலுதான் படத்தின் பெரிய ப்ளஸ். ரொம்ப நாளைக்குப் பிறகு விஜய் இந்தப் படத்தில் 'நடித்திருந்தது' குறிப்பிடத்தக்கது!

10. ஆடுகளம்

தனுஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் வென்ற இந்தப் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக வெளியானது (எந்த அடிப்படையில் இந்த விருதுகள் தரப்பட்டன என்பதுதான் இதுவரை யாருக்கும் புரியாத புதிர். பாலு மகேந்திராவைத்தான் கேட்க வேண்டும்!!). சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்கள் இந்தப் படத்தை வசூல் ரீதியாக சுமாரான வெற்றி பெற உதவின!

வெள்ளி, 23 டிசம்பர், 2011

முல்லை பெரியாறு அணை சம்பந்தமாக தமிழர்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்படுவதை கண்டித்து கடையநல்லூர் டிரைவர்கள் சங்கம் சார்பில் அடையாள வேலை நிறுத்தம் & உண்ணவிரதம்

முல்லை பெரியாறு அணை சம்பந்தமாக தமிழர்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்படுவதை கண்டித்து கடையநல்லூர் டிரைவர்கள் சங்கம் சார்பில் 




அடையாள வேலை நிறுத்தம் & உண்ணவிரதம்

வியாழன், 22 டிசம்பர், 2011

இனி கடையநல்லூரிலும் KFC சிக்கன் சாப்பிடலாம்


இனி கடையநல்லூரிலும் KFC சிக்கன் சாப்பிடலாம்

கடையநல்லூரில் சுகுணாவின் நேரடி விற்பனை நிலையம்
புதிதாக துவங்குகிறார்கள்

மேலும் விபரங்களுக்கு
AK பிராய்லர்ஸ் (பாட்டா ஷோரூம் அருகே)

AK சிக்கன் ஷோரூம்
மெயின் பஜார்


கடையநல்லூர்
தொடர்புக்கு 9245545954, 94443582679, 9245590217,  9976904369

கடையநல்லூர் அருகே சாலையை மறைக்கும் மரங்களால் வாகனஓட்டிகள் அவதி

கடையநல்லூர் அருகேயுள்ள மங்களாபுரம் வளைவுப் பகுதியில் சாலையை மறைக்கும் வகையில் உள்ள மரங்களால் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.


  கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் அருகேயுள்ள மங்களாபுரம் வளைவுப் பகுதியில் வரிசையாக மரங்கள் உள்ளன. இவை சாலையை மறைப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.


  முல்லைப் பெரியாறு பிரச்னை காரணமாக இச் சாலையை பயன்படுத்தி கேரளத்துக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள், கனரக வாகனங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
  எனவே, இந்த வளைவுப் பகுதியிலுள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அறிவிப்பு பலகை:  இந்த வளைவுப் பகுதியில் அபாய வளைவு என்ற அறிவிப்பு பலகையை வைத்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் அருகே இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை அரசு நிலைநாட்ஹடக் கோரியும், கேரள அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


  வட்டாரக் குழு உறுப்பினர் துரை தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் சுப்பையா, நகரச் செயலர் அயுப்கான், ஏஐடியுசி மாவட்டச் பொதுச் செயலர் காசிவிசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக செங்கோட்டையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1357 பேர் கைது

முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக செங்கோட்டையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1357 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கோட்டையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை வலியுறுத்தியும், தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் முல்லை பெரியாறு உரிமை போர் மற்றும் சாலை முற்றுகை போர் நேற்று செங்கோட்டை வனச்சரகர் டோல்கேட் அருகே நடந்தது. மதிமுக கொள்ளை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமை வகித்தார். திருநெல்வேலி புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் பெருமாள், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்றுகை போராட்டத்தை வலியுறுத்தி முன்னாள் எம்.பி. சிப்பிபாறை ரவிசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் டாக்டர்.சதன்திருமலைக்குமார், குட்டி (எ) சண்முகசிதம்பரம் மற்றும் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

சாலை மறியல் போராட்டத்தை அடுத்து செங்கோட்டை-கொல்லம், செங்கோட்டை-திருமலைக்கோவில், செங்கோட்டை-கடையநல்லூர் உள்ளிட்ட வழிதடங்களின் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. சாலை மறியல் போராட்டத்தை வலியுறுத்தி பகுதி பகுதியாக சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 1357 கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சாலைமறியல் போராட்டத்தை அடுத்து நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜூ, மாவட்ட எஸ்.பி. விஜேயேந்திர பிதரி உத்தரவின்படி டி.எஸ்.பி.,கள் பாண்டியராஜன், ஜமீம் மற்றும் 10க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் நீரோடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையநல்லூர் கருப்பாநதி அணையின் கீழுள்ள பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய், பெருங்கால்வாய் உள்ளிட்ட ஓடைகளின் மூலம் 72-க்கும் மேற்பட்ட குளங்கள் நீர்வசதி பெறுகின்றன.
இந்த அணை மூலம் சுமார் 9,515 ஏக்கர் நிலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. அணைக்கட்டின் கீழ் 7 சிறிய அணைக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு அவை மூலம் குளங்களுக்கு தண்ணீர் திருப்பிவிடப்படுகிறது.

விவசாய நிலங்களுக்கு கருப்பாநதி அணையிலிருந்து நீரை எடுத்துச் செல்லும் பாப்பான் கால்வாய் ஓடை மூலம் சுமார் 34 குளங்களிலுள்ள சுமார் 4,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
சுமார் 16 கிமீ தொலைவுக்கு நீரைச் சுமந்து செல்லும் பாப்பான் கால்வாயில், 4 கிமீ தொலைவு கடையநல்லூர் நகருக்குள் செல்கிறது. இப் பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் கால்வாய் குறுகிவிட்டது. இதனால், அணையிலிருந்து திறக்கப்படும் நீர் குளங்களுக்குச் செல்லாமல் ஊருக்குள் புகுந்து வீணாகிறது என இப் பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

நீரை வெளியேற்றினால் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அது தொடர்ந்து தவிர்க்கப்படுகிறது. இதனால் போதிய நீர்வரத்து இருந்தாலும் அணையிலிருந்து சிறிதுசிறிதாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் கடைமடைப் பகுதியிலுள்ள பல குளங்களுக்குத் தண்ணீர் செல்வதில்லை என்கிறார் கருப்பாநதி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ரத்தினவேல்பாண்டியன்.

கடந்த ஆண்டு பாப்பான் கால்வாய் ஓடையில் இருந்த ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்ட நிலையில், இன்னமும் ஆக்கிரமிப்புகள் தொடருவதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கிடையே, கடையநல்லூர் ஜெகவீரராமபேரி குளத்தின் மறுகால் செல்லும் ஓடையிலும் கட்டட ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், அந்த ஓடை மிகவும் குறுகிவிட்டது. ஓடை வழியாக வீட்டின் கழிவுகளும் வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் தண்ணீர் செல்ல இயலாதவாறு கட்டடங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் நகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றவும், புதிய ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையநல்லூர் டிரைவர்கள் வேலை நிறுத்தம் & உண்ணவிரதம் அறிவிப்பு


முல்லை பெரியாறு அணை சம்பந்தமாக தமிழர்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்படுவதை கண்டித்து கடையநல்லூர் டிரைவர்கள் சங்கம் சார்பில் அடையாள வேலை நிறுத்தம் & உண்ணவிரதம் அறிவிப்பு