கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 15 மே, 2012

தொழுகை நேரங்களில் மின் வெட்டு : இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

தொழுகை நேரங்களில் மின் வெட்டு ஏற்படுத்துவதற்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாளில் இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் முகம்மது தீனுல் ஹாரீஸ் மற்றும் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
மேலப்பாளையம், பேட்டை மற்றும் பாளை பகுதிகளில் ஏராளமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். வெள்ளிக் கிழமையில் ஏற்படும் மின் தடையால் தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மின் விசிறி மற்றும் ஒலி பெருக்கி வசதி இல்லாமல் தொழுகை பாதிக்கப்ப்டடுள்ளது.எனவே, வெள்ளிக் கிழமை சிறப்பு தொழுகை நாளில் மின் வெட்டு ஏற்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலுக்கல் மூலம் தமிழக ஹஜ் பயணியர் தேர்வு மே 15 அன்று சென்னையில் நடைபெறும்!


இந்திய ஹஜ் குழு மூலம் - தமிழகத்தில் இருந்து இவ்வாண்டு பயணம் மேற்கொள்ளவுள்ள பயணியரை தேர்வு செய்ய குலுக்கல், மே 15 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை வருமாறு:

1. ஹஜ் 2012-ல் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழ் நாட்டைச் சேர்ந்த 12,000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள், தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் நாட்டிற்கான ஒதுக்கீடு சுமார் 3000 மட்டுமே. எனவே, மத்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, ஹஜ் 2012-ற்கான புனிதப் பயணிகளைத் தெரிவு செய்ய, குலுக்கலை (குறா) நடத்த தமிழ் நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சி 15.05.2012 (செவ்வாய்கிழமை) அன்று மாலை 3.00 மணியளவில், சென்னை, இராயப்பேட்டை, புதுக் கல்லூரி வளாகத்திலுள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

2. தமிழ் நாடு மாநில ஹஜ் குழு மூலமாக ஹஜ் 2012-ல் ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள், இக்குலுக்கலில் (குறாவில்) கலந்து கொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை.

திங்கள், 14 மே, 2012

கடையநல்லூரில் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

வாக்களித்த மக்களுக்கு தவறு நடந்து விடக்கூடாது என்ற உறுதியின்படி டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் முதல்வர் ஜெயலலிதா நேரடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
கடையநல்லூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பில் சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ முகாம் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமை முன்னிட்டு காலை 9 மணிக்கே ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகை தந்த வண்ணம் இருந்தனர். மருத்துவ முகாமிற்கு கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் மீரான்மைதீன் வரவேற்றார். நெல்லை சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் அருண்மொழி, தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன், ஹிதாயத்துல் பள்ளி நிர்வாகி செய்யது முகைதீன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், கடையநல்லூர் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அருள்ராஜ், கடையநல்லூர் நகர செயலாளர் கிட்டுராஜா உட்பட பலர் பேசினர்.
முகாமை துவக்கி வைத்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேசியதாவது:
டெங்கு காய்ச்சல் நெல்லை மாவட்டத்தில் காணப்படுகிறது என்ற தகவல் வந்தவுடன் முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்திலிருந்து இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வாக்களித்த மக்களுக்கு எந்த தவறும் நடந்திடக்கூடாது என்ற உறுதியின் அடிப்படையில் முதல்வர் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்யும், நானும் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதின்படி சென்னையிலிருந்து மருத்துவக்குழுக்கள் அனுப்பபட்டன. மாவட்ட நிர்வாகமும் இதற்கான பணியினை விரைவுபடுத்தியது. இந்த பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். மருத்துவ குழுக்கள் தெரிவிக்கும் அறிவுரைகளை கேட்டு மேலும் இந்நோய் பரவாமல் இருப்பதற்கு சுகாதாரத்துறையினருடன் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசினார்.
மருத்துவ முகாமில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் மோகன், கடையநல்லூர் யூனியன் சேர்மன் பானுமதி, துணைத் தலைவர் கம்பனேரி பெரியதுரை, முன்னாள் நகராட்சி தலைவர் டாக்டர் சஞ்சீவி, சவுதி அரேபியா பேரவை செய்தி தொடர்பாளர் கமாலுதீன், மைதீன், பஞ்.,தலைவர் மூக்கையா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.
முகாமினை முன்னிட்டு பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையினை அமைச்சர் வழங்கினார்.

கடையநல்லூரில் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொசு வலை


கடையநல்லூரில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொசு வலைகள் வழங்கப்பட்டது.

கடையநல்லூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தவ்ஹீத் ஜமாத் ரஹ்மானியாபுரம் மற்றும் டவுன் கிளை சார்பில் 20 படுக்கைகளுக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணன், டாக்டர் சண்முகையா பாண்டியன், நகராட்சி சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் குறிச்சிகுளம் சுலைமான், புளியங்குடி செய்யதுஅலி, செயலாளர் ஹாஜா முகைதீன், தலைவர் செய்யது மசூது, மருத்துவ அணி சாகுல்ஹமீது உடனிருந்தனர்.

கடையநல்லூரில் வரும் கல்வியாண்டிலேயே கலைக்கல்லூரி துவக்க நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி அறிவிப்பு

கடையநல்லூரில் வரும் கல்வியாண்டிலேயே கலைக்கல்லூரி துவக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுக., செயல்வீரர்கள் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை அதிமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கதர் மற்றம் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் துரையப்பா, முத்துசெல்வி, இளைஞரணி மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், தென்காசி நகராட்சி தலைவர் பானு, வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் மாடசாமிபாண்டியன், மாவட்ட மாணவரணி செயலாளர் அருள்ராஜ், சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட செயலாளர் நயினாமுகம்மது, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் துரை, குற்றாலம் டவுன் பஞ்.,தலைவர் லதா முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் தீர்மானங்களை வாசித்தார்.


வெள்ளி, 11 மே, 2012

நண்பர் முட்டணி ஹாலித் திருமண அழைப்பிதழ்




நண்பர் முட்டணி ஹாலித் திருமண நல்வாழ்விற்காக  இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டுகிறோம் .

மேலான அல்லாஹ் உங்கள் இருவரையும் இம்மையிலும், மறுமையிலும் ஒன்றினைப்பானாக!

பெருமானாரின் (ஸல்) நிறைவான சாந்தி நம் அனைவரின் மீதும் நிறைந்திட அல்லாஹ் அருள் புரிவானாக!

பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜம அ பைனகுமா Fபீஹைர்.

டாக்டர் பட்டம் வாங்குவதிலும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் சாதனைப் படைத்துள்ளார்.



தேசிய விருது வாங்குவதில் மட்டுமல்ல, டாக்டர் பட்டம் வாங்குவதிலும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் சாதனைப் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் உள்ள மியாமி பல்கலைக் கழகம் அவருக்கு இந்த முறை டாக்டர் பட்டம் வழங்கு கவுரவித்துள்ளது. இது அவர் பெறும் நான்காவது டாக்டர் பட்டமாகும்.

இந்த விழாவில் நேரில் பங்கேற்ற ஏ ஆர் ரஹ்மான், "25 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அதிபர் என்னை வெள்ளை மாளிகைக்கு அழைப்பார், கிறிஸ்துமஸுக்கு அவரிடமிருந்து வாழ்த்து அட்டை வரும் என்றெல்லாம் நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.

அமெரிக்காவில் நான் பெறும் முதல் டாக்டர் பட்டம் இதுதான். மியாமி பல்கலைக்கழகத்துடன் நானும் என் இசையும் கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் நெருக்கமாகியுள்ளோம். மியாமி மாணவர்கள் எனது கேஎம் மியூசிக் கன்சர்வேடரியில் இணைந்து எனக்கு உதவி வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி," என்றார்.

தன்னை திரையுலகுக்கு முதல் முதலில் அறிமுகப்படுத்திய மணிரத்னத்துக்கு இந்த மேடையில் நன்றி சொல்லவும் ரஹ்மான் தவறவில்லை.