கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 7 ஜூலை, 2012

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு


10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பதற்கான கடைசி தேதி வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது..
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
2012-2013ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களும் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஜூன் 30ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாநிலத்தின் பல இடங்களில் இருந்தும் காலநீட்டிப்பு செய்ய கோரி கடிதங்கள் வந்துள்ளன. இது புதிய நடைமுறை என்பதாலும், பல தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிப்பதை கருத்தில் கொண்டும், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த 8ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், தேர்வு முடிவை எதிர்நோக்கியுள்ள தேர்வர்கள் தேர்ச்சி பெற்றால் நடப்பு ஆண்டிலேயே 10ம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்து கொள்ளலாம் என்பதாலும் பதிவு செய்யும் கடைசி தேதி வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
தனித்தேர்வர்கள் தேர்வுத்துறையின் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து விவரங்களை 2 நகல்களில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் வரும் 31ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 6 ஜூலை, 2012

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கடையநல்லூர் பழவியாபாரி வெளிநாட்டுக்கு ஓட்டம்?



கடையநல்லூர் கிருஷ்ணா புரம் ரெயிவேபீடர் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது34). இவர் கடையநல்லூர் தினசரி மார்க்கெட்டில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். மாரியப்பனின் மனைவி கஸ்தூரி(27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கடந்த 27-ந்தேதி இரவு 7மணியளவில் வீட்டைவிட்டு வெளியே சென்ற மாரியப்பன், பின்னர் வீடு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த கஸ்தூரி, தனது கணவர் மாயமானது குறித்து கடைய நல்லூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அவர் தன்னுடைய புகாரில், தனது கணவருக்கும், கடையநல்லூர் தினசரி மார்க்கெட் அருகே பியூட்டிபார்லர் நடத்திவந்த கிருஷ்ணாபுரம் கோபால கிருஷ்ணர் கோவில் தெருவை சேர்ந்த பாலு என்பவரின் மகள் ஜமுனா(27) என்பவருக்கும் பழக்கம் இருந்ததாகவும், ஆகவே ஜமுனா தனது கணவரை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

அதன்பேரில் கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மாரியப்பனுக்கும், ஜமுனாவுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்ததும், திருமணம் செய்யாமலேயே இருவரும் ரகசியமாக கணவன்-மனைவியாக வாழ்ந்துவந்ததும், அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து கஸ்தூரி புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாரியப்பன், அவரை கடத்தியதாக புகார் கூறுப்பட்டுள்ள ஜமுனா ஆகிய 2 பேரையும் தேடிவந்தனர். இதில் ஜமுனா சிக்கினார். 

அவரையும், கஸ்தூரியையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது ஜமுனாவும், கஸ்தூரியும் தனக்கும் மாரியப்பனுக்கும் தான் முதலில் திருமணம் நடந்தது என்று கூறி, தன்னுடன் சேர்த்து வைக்குமாறு இருவரும் தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. மாரியப்பன் எங்கே? என்று கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று ஜமுனா கூறியதாக தெரிகிறது. இதனால் மாரியப்பன் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என்பது மர்மமாக உள்ளது. 

ஆனால் ஜமுனா கூறியதன்பேரில் மாரியப்பன் வெளிநாட்டிற்கு எங்கும் சென்றிருக்கலாம் என்று கஸ்தூரி கூறினார். அதனடிப்படையில் மாரியப்பன் வெளிநாட்டிற்கு ஓடிவிட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

இதுகுறித்து கஸ்தூரி கூறும்போது, புகார் கொடுத்த எனக்கு நீதிகிடைக்கும் வகையில் போலீசார் செயல்படுவதாக தெரியவில்லை. ஆகவே எனது கணவரை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தி நாளைமறுநாள் (8-ந்தேதி) பாளையில் உள்ள நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தனது குழந்தைகளுடன் தர்ணா போராட்டதத்தில் ஈடுபட உள்ளேன் என்றார்.

புதன், 4 ஜூலை, 2012

சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

சிறுபான்மை சமுதாயங்களை சேர்ந்த மாணவியருக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்க இருப்பதாகவும், தகுதியுள்ள மாணவியர் அதனை பயன்படுத்தக்கொள்ளலாம் என்றும் ராமநாதபுரம் கலெக்டர் கூறியுள்ளார்.   கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்மையால் கல்வியை தொடர முடியாமல் இருக்கும் இஸ்லாமியர், சிறிஸ்தவர். சீக்கியர,; பார்சி, மற்றும் புத்த மதத்தை சேர்ந்த மாணவிகளுக்கு கல்வியை தொடர வசதியாக மத்திய அரசு மெளலானா ஆசாத் கல்வி உதவித்தொகை திட்டத்தை எற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி 11 ம் வகுப்பு மாணவிகளுக்கு வருடத்துக்கு ரூ 12 ஆயிரம் இருதவணைகளாக வழங்கப்படுகிறது. கல்விக்கட்டணம். பாடபுத்தகம், உண்டி மற்றும் உறையுள் செலவுக்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தன்படி நிதியுதவி பெற குறைந்த பட்சம் 10 ம் வகுப்பில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய மாணவிகள் தங்கள் உரிய சான்றுகளுடன் விண்ண்பபிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

குரூப் 4 தேர்வுக்கு ஆன்-லைனில் ஹால் டிக்கெட்... செல்போன் மூலம் டி.என்.பி.எஸ்.சி "எஸ்.எம்.எஸ்'

குரூப் 4 தேர்வுக்கு ஆன்-லைனில் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய விண்ணப்பதாரர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் குரூப் 4 தேர்வுகள் வரும் 7ம் தேதி நடக்கிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்வுகள் முறையாக நடக்கும் வகையில் தேர்வு மையங்கள் முழு அளவில் வீடியோ மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு முதன் முறையாக ஆன்-லைனில் தகுதியானவர்கள் விண்ணப்பித்தனர். இதே போல், ஹால் டிக்கெட்களும் விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கு அனுப்பபடாமல் ஆன்-லைன் மூலமே ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்யவும் வசதி செய்யப்பட்டது. இந்த வசதியை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் 7ம் தேதி ஒவ்வொரு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் காலை முதல் மாலை வரை தேர்வுகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களின் செல்போன்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் "எஸ்.எம்.எஸ்' அனுப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விண்ணப்பதாரர்களுக்கும் பெயரை குறிப்பிட்டு, ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய "அட்வைஸ்' விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்ப எண்ணையும் குறிப்பிட்டு டவுன்லோடு செய்ய வேண்டிய வெப்சைட் http://tnpscexams.net/callletter/tnpsc_142012/index.php தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பத்தை டவுன்லோடு செய்திருந்தால் இந்த எஸ்.எம்.எஸ் தகவலை தவிர்க்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மையங்களுக்கு வினாத்தாள்கள்: இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான வினாத்தாள்கள் சென்னையில் இருந்து அனுப்பபட்டு வருகிறது. இந்த வினாத்தாட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள சார் நிலை கருவூலங்களில் பாதுகாப்பாக வைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருவூலங்களில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடையநல்லூரில் திடீர் வாந்த பேதி அரசு ஆஸ்பத்தரியில் 50 பேர் அனுமதி

கடையநல்லூரில் ஏற்பட்ட திடீர் வாந்தி பேதியால் நேற்று 50க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த மூன்று மாத காலமாக பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த டெங்கு காய்ச்சல், கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த சில தினங்களாக வாந்திபேதி காணப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியில் காணப்படும் சுகாதாரமற்ற நிலை, குடிநீரில் சாக்கடை கலந்து வரும் விநியோகம் போன்றவற்றால் தொற்றுநோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகத்தின் போது சாக்கடை கலந்த தண்ணீர் விநியோகம் செய்வதாக கூறப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் பொதுமக்களின் புகாரினை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ளாததால் கடையநல்லூர் பகுதியில் வாந்தி பேதியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வெளிநோயாளிகளாக வாந்திபேதிக்கு சிகிச்சை பெற்று சென்ற நிலையில் கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோயில் தெரு கிருஷ்ணம்மாள்(40), மிட்டாதாரர் தெரு கோவிந்தம்மாள்(50), வடக்கு தெரு ஜீவா(38), வெள்ளத்தாய்(40), மும்தாஜ்(48), காந்தாரி(28), கல்யாணி(58), சுப்பம்மாள்(50), கிருஷ்ணவேணி(21), மாலதி(65), சுதி(15), சுப்புலட்சுமி(30) கடையநல்லூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் வார்டில் கிருஷ்ணாபுரம் துரைப்பாண்டி(29), கார்த்திகேயன்(17), மாசாணம்(53), குமார்(30), சரவணன்(40) ஆகியோர் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து வாந்திபேதியால் நேற்று மாலை வரை ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சென்றவண்ணம் இருந்தனர். இதனிடையே கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம், மேலக்கடையநல்லூர், பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் தனியார் ஆஸ்பத்திரிகளில் வாந்திபேதி பாதிப்பால் சிகிச்சை பெற்று சென்றதாக கூறப்படுகிறது. திடீரென கடையநல்லூர் நகராட்சி பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏற்பட்ட வாந்திபேதி பாதிப்பால் ஏராளமானோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். டெங்கு, மலேரியாவை தொடர்ந்து, வாந்திபேதி என கடையநல்லூர் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் தொடர் நோயால் அவதிப்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும், கவலையும் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 3 ஜூலை, 2012

ஜெர்மனியில் ஒரே நாளில் 8135 முறை மின்னல் தாக்குதல்


தொடர்ந்து புயல் மழை பெய்து வருவதால் ஜேர்மனியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஜெர்மனியில் கடந்த வார இறுதியில் பெய்த புயல் மழையில் மரம் முறிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அதேபோல ஹெஸெனில் உள்ள கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் மின்னல் தாக்கி மூன்று கோல்ஃப் வீராங்கனைகள் மரணமடைந்தனர்.
மற்றொரு பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக போலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், மின்னல் பலமாகத் தாக்கி 51 பேருக்குக் காயம் ஏற்பட்டது. ஒன்பது பேர் மோசமான காயங்களால் பாதிக்கப்பட்டனர். பவேரியாவில் நடந்த Volksfest விழாவில் புயல்காற்றால் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் 18 பேர் படுகாயமுற்றனர்.
கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டதாக ஸ்டட்கார்ட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. மரங்களும், மின்கம்பங்களும் பெயர்ந்து விழுந்ததால் மின்சாரவெட்டும், போக்குவரத்துத் தடையும் ஏற்பட்டன.
பெர்லின் பகுதியில் ஓர் இரவில் மட்டும் 8135 மின்னல் தாக்குதல் ஏற்பட்டதாக வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.

களைகட்ட தொடங்கிய குற்றால குளு,குளு சீசன்



குற்றாலத்தில் குளு,குளு சீசன் நிலவுகிறது. அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்வர்.
 
கடந்த ஆண்டு சீசன் சரியான நேரத்தில் அதாவது ஜுன் 1-ந்தேதி அதிரடியாக துவங்கியது. தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருமளவு கொட்டியது. ஆனால் இந்தாண்டோ நிலைமை தலைகீழாக உள்ளது. கடந்த 7-ந்தேதி மெயினருவியில் தண்ணீர் விழத்தொடங்கியது. ஒரு வார காலம் மட்டுமே தண்ணீர் விழுந்த நிலையில், அதன் பிறகு குற்றாலம் பகுதியில் சாரல் இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து பெருமளவு குறைந்துவிட்டது.
 
மெயினருவி மற்றும் ஐந்தருவியில் மட்டும் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழவில்லை. இதனால் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்து ஏலம் எடுத்த வியாபாரிகளும் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தனர்.
 
சீசன் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு காலம் நிறைவு பெற்ற நிலையில், குற்றாலம் பகுதியில் கடந்த 2 தினங்களாக லேசான சாரல் இருந்து வந்தது. குளு, குளுவென தென்றல் காற்று வீசி வந்தது. வெயிலே தெரியாத அளவிற்கு மேகக்கூட்டங்கள் திரண்டிருந்தது. இதனால் நேற்று ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகமாக இருந்தது.
 
இந்த நிலையில் நேற்று இரவு குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழை காரணம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை மெயினருவில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டுகிறது.
 
ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. குளு, குளு சீசன் நிலவுவதாலும், அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதால் குற்றால சீசனும் நன்றாக களைகட்டி விடும் என சுற்றுலா பயணிகள் நம்பிக்கையில் உள்ளனர். மேலும் இதே நிலை குற்றாலத்தில் நீடித்தால் இன்னும் சில தினங்களில் புலியருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்டவைகளில் தண்ணீர் விழ தொடங்கிவிடும்.