கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 5 ஜனவரி, 2012

மசூதுதைக்கா நடுநிலைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்


மசூதுதைக்கா நடுநிலைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்





ஊர்வலத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அடங்கிய வாசகங்கள் கொண்டு சென்றனர்

புதன், 4 ஜனவரி, 2012

நெல்லை சந்திப்பில் பரிதாபம்: அய்யப்ப பக்தர்கள் பஸ் மோதி பெண் பலி


சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முருகன், கார் டிரைவர். இவரது மனைவி முப்புடாதி(வயது 25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இன்று காலை முருகன், தனது மனைவி,குழந்தைகளுடன் பாளையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் மீனாட்சிபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
 
நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை கடந்து அரவிந்த் கண் மருத்துவமனை அருகே வரும் போது, அவர்களது பின்னால் வேகமாக வந்த மினி பஸ் எதிர்பாராதவிதமாக பைக்கில் மோதியது. இதில் பைக்கில் இருந்து முருகன், அவரது மனைவி, குழந்தைகள் கீழே விழுந்தனர்.
 
அப்போது பஸ்சின் சக்கரம் கீழே விழுந்த முப்புடாதியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். முருகன் மற்றும் அவரது குழந்தைகள் காயமடைந்தனர்.
 
இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் திருமலை, கிளாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்த முருகன், அவரது குழந்தைகளை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
 
முப்புடாதி உடலையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் மீது மோதிய மினி பஸ்சில் அய்யப்ப பக்தர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினருக்கு இலவச டிரைவிங்பயிற்சிக்கு நாளை "இன்டர்வியூ'

இலவச டிரைவிங் பயிற்சி பெற விரும்பும் சிறுபான்மையினர் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் படித்து விட்டு வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர் பயிற்சி திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியுடன் தமிழ்நாடு அரசு சாலை போக்குவரத்து நிறுவனம் சார்பில் இலகு ரக மற்றும் கன ரக டிரைவிங் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதில் இலகு ரக பயிற்சி சென்னை தரமணி ஐ.ஆர்.டி பயிற்சி நிறுவனம், திருச்சி, கன ரக டிரைவிங் பயிற்சிக்கு விழுப்புரம், வேலூர், திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம், காரைக்குடி, சேலம், தர்மபுரி, ஈரோடு, பொள்ளாச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், விருதுநகர், திருச்சி ஐ.ஆர்.டி, கும்மிடிப்பூண்டி ஐ.ஆர்.டி நிறுவனங்களில் நடத்தப்படுகிறது.இதற்கான இன்டர்வியூ நாளை (5ம் தேதி) மற்றும் 6ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 1.1.2012 அன்று 20 வயது நிறைவு பெற்ற இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த மற்றும் பார்சிய மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர் இப்பயிற்சியில் சேரலாம்.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம் என்று கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.

புத்தாண்டில் தமிழகத்தில் ரூ.150 கோடி மது விற்பனை: விற்பனையில் சாதனை

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தமிழகத்தில் ரூ.150 கோடிக்கு மது விற்றுள்ளது. அதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் ரூ.2.30 கோடிக்கு மதுவகைகள் விற்பனையாகின. 

தமிழகத்தில் சாதாரண நாட்களை காட்டிலும் பண்டிகை காலங்களில் மது விற்பனை சக்கை போடு போடும். 2012 புத்தாண்டையொட்டி மாநிலம் முழுவதும் ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 225 கடைகள் செயல்பட்டு வருகின்றன. சாதாரண நாட்களில் ரூ.1.50 கோடி முதல் ரூ.1.75 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும் நிலையில் புத்தாண்டு அன்று ரூ.2.30 கோடிக்கு மதுபானங்கள் விற்று தீர்ந்தன. 

இதன் மூலம் மற்ற நாட்களை விட புத்தாண்டன்று விற்பனை 35 சதவீதம் அதிகரி்த்தது. அடுத்த இலக்காக வரும் பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.3 கோடி என்ற அளவிலும், மாநில அளவில் ரூ.175 கோடி என்ற அளவிலும் மது விற்பனையை அதிகரித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இதையொட்டி அடுத்த வாரம் அனைத்து கடைகளிலும் முழு அளவு சரக்கு இருப்பு வைக்க அனைத்து மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்களுக்கு கூடுதல் சரக்குகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போக்குவரத்து விதிகளை கடைபிடித்து சாலை விபத்துக்களை தடுக்க "அட்வைஸ்'

போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் சாலை விபத்துக்களை தடுக்கலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

நெல்லை ரோட்டரி கழகத்தின் சார்பில் பாளையில் 23வது சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. தலைவர் ஆர்யாஸ் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார்.

இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும் போது, ""சாலை பாதுகாப்பு குறித்த முறையான கல்வியறிவு அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். பொதுமக்களும், வாகன இயக்குனர்களும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு அமைப்புகள் அதனை நடைமுறைப்படுத்தவும், பொதுமக்களிடம் சேர்க்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.இதில் உதவி ஆளுனர் மெல்கியோ, வருங்கால தலைவர் ரமணி, உறுப்பினர்கள ஜெரால்டு, சிவா, சங்கரசுப்பு, சொக்கலிங்கம், வாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.செயலாளர் யூசுப் ராஜா நன்றி கூறினார்.

பேட்டை பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்தல்

பேட்டை முகமதுநயினார் பள்ளிவாசல் ஜமாத் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.பள்ளிவாசல் அரங்கில் மாவட்ட வக்பு போர்டு அலுவலர்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. 9 இடங்களுக்கு 15 பேர் போட்டியிட்டனர்.ஜமாத் தலைவராக நூர்முகமது, செயலாளராக அப்துல்காதர், பொருளாளராக அமானுதீன், கமிட்டி உறுப்பினர்களாக அப்துல்லா, சுபியான், பக்கீர்மைதீன், சிக்கந்தர், கலீல்முகமது இஸ்மாயில், பீர்மைதீன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

கடையநல்லூரில் இன்று முதல் மின்தடை நேரம் மாற்றியமைப்பு

கடையநல்லூர் மின் கோட்டத்துக்குள்பட்ட கடையநல்லூர், புளியங்குடி, வீரசிகாமணி, நாரணபுரம், விஸ்வநாதப்பேரி ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் மின்விநியோகம் பெறும் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 1) முதல் புதிய மின் தடை நேரம் அமல் செய்யப்படுகிறது.
 இது தொடர்பாக கடையநல்லூர் கோட்டச் செயற்பொறியாளர் ஜே.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


 கடையநல்லூர் துணை மின் நிலையம்: கடையநல்லூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட நகரம் 1, 2 பகுதிகளில் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை மின் தடை இருக்கும். கடையநல்லூர் புறநகர் பகுதியில் காலை 10 முதல் நண்பகல் 12 வரை மின்தடை இருக்கும். இப்பகுதியில் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரையும், நண்பகல் 12 முதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். நயினாரகரம் ஃபீடரில் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை மின் தடை இருக்கும். இப்பகுதியில் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரையும், நண்பகல் 12 முதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்


 புளியங்குடி துணை மின் நிலையம்: புளியங்குடி ஃபீடரில் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை மின்தடை ஏற்படும். சொக்கம்பட்டி ஃபீடரில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை இருக்கும். இப்பகுதியில் அதிகாலை 3 முதல் காலை 6 மணி வரையும், மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.


 வீரசிகாமணி துணை மின் நிலையம்: சேர்ந்தமரம் ஃபீடரில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை இருக்கும். இப்பகுதியில் அதிகாலை 3 முதல் காலை 6 மணி வரையும், காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஊத்தான்குளம் ஃபீடரில் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை மின் தடை இருக்கும். இப்பகுதியில் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரையும், நண்பகல் 12 முதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். வலசை ஃபீடரில் நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். இப்பகுதியில் அதிகாலை 3 முதல் காலை 6 மணி வரையும், மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.


 நாரணபுரம் துணை மின் நிலையம்: சிந்தாமணி ஃபீடரில் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். இப்பகுதியில் அதிகாலை 3 முதல் மாலை 6 மணி வரையும், மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். நெல்கட்டும்செவல் ஃபீடருக்குள்பட்ட பகுதிகளில் காலை 6 முதல் 8 மணி வரை மின்தடை இருக்கும். இப்பகுதிகளில் பிற்பகல் 12 முதல் மாலை 3 மணி வரையும், மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ராயகிரி ஃபீடரில் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை மின்தடை இருக்கும். இப்பகுதியில் நள்ளிரவு 12 மணி முதல் மாலை 3 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.


 விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையம்: சிவகிரி ஃபீடரில் காலை 6 முதல் 8 மணி வரை மின்தடை இருக்கும். வழிவழிகுளம் ஃபீடரில் காலை 6 முதல் 8 மணி வரை மின்தடை இருக்கும். இப்பகுதியில் நள்ளிரவு 12 முதல் மாலை 3 மணி வரையும், நண்பகல் 12 முதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். விஸ்வநாதப்பேரி ஃபீடரில் காலை 6 முதல் 8 மணி வரை மின்தடை இருக்கும். இப்பகுதியில் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரையும், நண்பகல் 12 முதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். தேவிப்பட்டணம் ஃபீடரில் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும். இப்பகுதியில் அதிகாலை 3 முதல் காலை 6 மணி வரையும், மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.


 இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.