கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

கடையநல்லூர் பகுதிகளில் 66வது சுதந்திர தினவிழா

கடையநல்லூர் பகுதிகளில் 66வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நகராட்சி தலைவர் சைபுன்னிசா தேசிய கொடி ஏற்றினார். நகராட்சி இன்ஜினியர் ராமலிங்கம், இளநிலை பொறியாளர் அகமதுஅலி, சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சேகர், நகராட்சி துணைத் தலைவர் ராசையா மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

* கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் துணைத் தலைவர் கம்பனேரி பெரியதுரை தலைமையில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை யூனியன் தலைவர் பானுமதி ஏற்றி வைத்தார். பிடிஓ மோகன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

* கடையநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் தேசிய கொடியை போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி ஏற்றி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், முத்துலட்சுமி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

* கடையநல்லூர் கல்வி சரகம் திரிகூடபுரம் இந்து நடுநிலைப் பள்ளியில் தேசிய கொடியை பஞ்., தலைவி முத்துசெல்வி (எ) பூங்கொடி ஏற்றி வைத்தார். பள்ளி தலைமையாசிரியை ஜெயசந்திரா, ஆசிரியர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் பஞ்.,தலைவர் முருகேசன், ஆசிரியர்கள் செண்பகஅருணாசலம், முருகையா, முத்துராமன், வெளியப்பசாமி, ஆசிரியைகள், கனகவல்லி, நிர்மலாதேவி, ராணி, வைகுண்டராமலட்சுமி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

* கடையநல்லூர் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை பள்ளி முதல்வரும் தாளாளருமான டாக்டர் ராஜாமுத்துக்குமார் ஏற்றி வைத்தார். பள்ளி தமிழாசிரியர் இசக்கிமுத்து சுதந்திர தின சிறப்புரையாற்றினார். விழாவில் பள்ளி துணை முதல்வர் முத்துகிருஷ்ணவேணி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

6.5 லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு: 17-ந் தேதி வெளியாகிறது

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை 6.5 லட்சம் பேர் எழுதினார்கள். இடைநிலை ஆசிரியர்கள் 2.5 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 4 லட்சம் பேரும் இத்தேர்வை எழுதினார்கள். 

23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இத்தேர்வு நடத்தப்பட்டது. தாள்-1, தாள்-2 ஆகிய இந்த இரண்டு தேர்வுகளையும் எழுத போதுமான காலஅவகாசம் கொடுக்கவில்லை. 150 கேள்விகளுக்கு 90 நிமிடங்களில் பதில் அளிக்க முடியவில்லை. கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி இருந்தால் மட்டுமே முறையாக பதில் அளிக்க முடியும் என்று தேர்வர்கள் புகார் கூறினார்கள். 

தமிழகம் முழுவதும் பரவலாக தேர்வர்கள் குற்றச்சாட்டை தெரிவித்தனர். போதுமான நேரம் ஒதுக்காமல் வினாத்தாள் தயாரிக்கப்பட்டதே இந்த குளறுபடிக்கு காரணம் என்று கூறப்பட்டது. 

இதற்கிடையில் வினாக்களுக்கான விடைகளை இணையதளத்தில் வெளியிட்டனர். தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகலுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை சரிபார்த்து ஏதாவது தவறுகள் இருந்தால் முறையிடலாம் என்று அறிவித்து இருந்தது. 

இந்த நிலையில் அனைத்து வினாத்தாள்களும் ஸ்கேன் செய்யப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன. மதிப்பீடு செய்ததில் மிக குறைந்த அளவில் அதாவது 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. 

6.5 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்று இருப்பதை அறிந்த அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு மறுத்துவிட்டனர். 

வருகிற 17 அல்லது 18-ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. அப்போது எத்தனை பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினர். அதனால் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சவுதி அரேபியாவில் பெண்களுக்காக தொழில் நகரம்

முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் ஷரியத் சட்டம் அமலில் உள்ளது. அதன்படி பெண்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி அவர்கள் வேலைக்கு செல்லக்கூடாது. அதனால் அங்கு 15 சதவீதம் பெண்களே பணிக்கு செல்கின்றனர். மற்றவர்கள் வீட்டில் பொழுதை வீணாக கழிக்கின்றனர். இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. 

எனவே, பெண்களுக்காக தனியாக தொழில் நகரங்களை உருவாக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. அங்கு தொழிற்சாலைகள் அமைத்து அவற்றை பெண்களே பணிபுரிந்து நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதற்கான முதற்கட்ட பணிகள் சவுதி தொழிற் கட்டமைப்பு ஆணையம் (மாடன்) மூலம் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டில் பெண்களுக்கென்றே பிரத்யேகமான புதிய நகரம் உருவாகும் என மாடன் நிறுவனத்தின் துணை டைரக்டர் ஜெனரல் சலே அல்-ரஷீத் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, 

பெண்கள் திறமையானவர்கள், அவர்களால் தொழிற்சாலைகளை சிறப்பாக நிர்வகித்து பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். அந்த திறன் அவர்களுக்கு இயற்கையிலேயே உள்ளது. சவுதி அரேபியாவில் இதுபோன்று பெண்களுக்கான தொழில் நகரங்கள் அதிக அளவில் உருவாக்கப்படும் என்றார்.

கடையநல்லூரில் மாவட்ட அளவிலான வட்டார விளையாட்டுப் போட்டி




நன்றி
நேஷனல் இபு

கடையநல்லூர் அருகே பஸ் மறியலால் பரபரப்பு


கடையநல்லூர் அருகே நேற்று இரவு ரோட்டை கடக்க முயன்ற பெண் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பஸ் கண்ணாடிகளை உடைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்டு வரும் விபத்து குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பஸ் மறியலில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குரவத்து பாதிக்கப்பட்டது.

சேர்ந்தமரம் அருகேயுள்ள பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் சண்முகையா மனைவி சின்னத்தாய் (45). இவர் நேற்று கடையநல்லூர் அருகே முத்துசாமியாபுரத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு ஊருக்கு திரும்பினாராம். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டை கடக்க முயன்ற சின்னத்தாய் மீது சங்கரன்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததாக தெரிகிறது. இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் அரசு பஸ் மீது ஆவேசத்தில் தாக்குதலை மேற்கொண்டனராம். இந்த தாக்குதலை தொடர்ந்து பஸ் டிரைவர் திருவேங்கடத்தை சேர்ந்த கென்னடி (49) பஸ்சில் இருந்து இறங்கி அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடி சென்றுவிட்டாராம். பஸ் கண்டக்டர் வாசுதேவநல்லூரை சேர்ந்த முருகையா (49) என்பவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதனை தொடர்ந்து முத்துசாமியாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் குறிப்பிட்ட சுமார் 1 கி.மீ.தூரத்திற்குள் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும், பலத்த காயங்கள் மற்றும் பலி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்து பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பஸ் விபத்தில் பலியான சின்னத்தாயின் உடல் தேசிய நெடுஞ்சாலையில் அப்படியே போடப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் ஆவேசத்துடன் அதிக வேகமாக வாகனங்கள் வருவதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனிடையில் போலீசாரின் சமரசத்தையடுத்து சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

சின்னத்தாயின் உடல் பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிரைவர் கென்னடி, கண்டக்டர் முருகையா ஆகிய இருவரும் கடையநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். இதுகுறித்து புளியங்குடி டிஎஸ்பி ஜமீம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து முத்துசாமியாபுரத்தில் நேற்று இரவு முதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சனி, 11 ஆகஸ்ட், 2012

மின்கட்டணம் புதிய விவரம்


மின்சாரத்தை தொட்டால்தான் நமக்கு ஷாக் அடிக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக மின்கட்டணத்தை பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஷாக் அடிக்கின்றது. தொடாமலே ஷாக் அடிக்கும் அளவிற்கு என்ன உள்ளது என்கின்றீர்களா? உயர்ந்துள்ள மின்கட்டணங்கள் தான்.கரண்ட் எங்கே ஒழுங்காக வருகின்றது.. இதில் மின்கட்டணம் எவ்வளவு வந்துவிடபோகின்றது என கேட்கின்றீர்களா? 10 மணிநேரம் மின்தடை செய்து 14  மணிநேரம் மின்சாரம் மின்சார பயன்பாட்டிற்கு எவ்வளவு வந்துவிடப்போகின்றது என்கின்றீர்களா ? கீழே உள்ள கட்டண விகிதத்தை பாருங்கள். நெருக்கிய உறவினர் - நண்பர் திடீரென்று மறைந்துவிட்டால் நம்மால் அவரின் இழப்பை தாங்க முடியாது. ஆனால் அவர்களே உடல் நிலை சரியில்லை - தேறுவது கடினம் என தெரியவரும்போது நமது மனது தன்னால் அந்த துயரத்தை தாங்கிகொள்கின்றது. அதுபோல் உங்களுக்கான மின்கட்டணம் திடீரென்று அதிகமாக வந்துஉள்ளது என நீங்கள் அதிர்ச்சி அடைந்துவிட கூடாது என்கின்ற அக்கறையில் இந்த அட்டவணையை பதிவிடுகின்றேன். எவ்வளவோ பார்த்துவிட்டோம் இது எம்மாத்திரம் என்கின்றீர்களா? கவலைப்படாதீர்கள்....இதுவும் கடந்துபோகும்..
சரி கட்டண விவரம் பற்றி கீழே பார்க்கலாம்.
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.)
இரண்டாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
மூன்றாம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)


நான்காம் நிலை:-
1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75.
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் 
முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10 யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள் செலுத்தவேண்டும்)
கடைகளுக்கானது:-
1-100 யூனிட் வரை ரூபாய் 4.30.
100 யூனிட்டுக்கு மேல உபயோகித்தால் 1 யூனிட் விலை ரூபாய் 7.00 மட்டுமே -
உங்களுக்கான அட்டவணை கீழே:-
வீடு இணைப்புக்கானது.
கடை இணைப்புக்கானது.
எனது கருத்து:-
நீங்கள் நான்கு ஸ்லாப்களில் (நிலைகள்)எந்த ஸ்லாப்பில் வருகின்றீர்களோ அதை தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.உதாரணத்திற்கு நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் நீங்கள் 460.00 ரூபாய் செலுத்தவேண்டும்.. கூடுதல் 10 யூனிட்டுக்கு 140.00 ரூபாய் அதிகம் செலுத்தவேண்டும்.அப்போழுது உங்களுக்கு ஒரு யூனிட் விலை 14.00 ரூபாயாக மாறிவிடுகின்றது.உங்கள் மீட்டரில் 150 யூனிட் வரும் சமயம் முதல் சிக்கனத்தை கடைபிடியுங்கள். அவசியமில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி பணத்தை செலவழிக்காதீர்கள்.

புதன், 8 ஆகஸ்ட், 2012

எஸ்.எம்.எஸ்., மூலம் மின்கட்டணம் அறியலாம் நெல்லையில் புதிய வசதி விரைவில் துவக்கம்

நெல்லை மாவட்டத்தில் மின்நுகர்வோர்களுக்கு மின்கட்டணத்தொகை, மின்தடை விபரத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும் திட்டம் விரைவில் துவக்கப்படவுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகத்தை சீர்செய்யவும், குறைந்த மின்னழுத்தப்பிரச்னையை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதன் எதிரொலியாக நெல்லை மாநகராட்சி, தென்காசி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், புளியங்குடி, கடையநல்லூர், வி.கே.புரம் உள்ளிட்ட பகுதிகளில் திருத்தியமைக்கப்பட்ட, விரைவுபடுத்தப்பட்ட மின் மேம்பாடு மற்றும் சீரமைப்புத்திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள மின்உற்பத்தி, பகிர்மானக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில், ""நெல்லையில் குறைந்த மின்னழுத்த பிரச்னையை சரிசெய்ய பாளை. சமாதானபுரம், உடையார்பட்டி (தச்சநல்லூர்), புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது.
புதிதாக மின்பாதைகள் அமைத்து சீரான மின்சப்ளை அளிக்கப்படவுள்ளது. மின்கம்பிகளில் பழுது ஏற்படுவதை தடுக்க உயரழுத்த, தாழ்வழுத்த மின்கம்பிகள் மாற்றம் செய்யப்படவுள்ளது. சிறிய மின்திறன் கொண்ட புதிய மின்மாற்றிகள் ஆங்காங்கே அமைக்கப்படவுள்ளது.
தரம் மிகுந்த புதிய மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளது. மின்நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தொகை, மின்தடை விபரம், இதர சேவைகளை எஸ்.எம்.எஸ்., இ.மெயில் மூலம் தெரிவிக்க, தகவலை பெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மின் நுகர்வோரின் செல்போன், டெலிபோன் எண்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அம்பாசமுத்திரத்தில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தென்காசியில் மங்கம்மாள் ரோட்டில் துணை மின்நிலையம் அமைக்க பணிகள் நடக்கிறது. மின்தடையை உடனுக்குடன் சரிசெய்ய மின்மாற்றி, அனைத்து பழுதுநீக்கும் கருவிகள், தகவல் தொடர்பு வசதிகள் நிறைந்த நடமாடும் மின்தடை நீக்கும் வாகன சேவை அளிக்கப்படவுள்ளது.
நவுயுகா தனியார் நிறுவனம் மூலம் மின் நுகர்வோர்களின் அனைத்து பயன்பாட்டு தகவல்களையும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவல்கள் சேகரிக்க வரும் நவயுகா ஊழியர்களிடம் போன் எண், இ.மெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களை நுகர்வோர்கள் தவறாமல் அளிக்க வேண்டும். இதன் மூலம் மின் பயன்பாட்டுத்தொகை, மின்தடை விபரங்கள், மின்கட்டணம் செலுத்திய விபரத்தை நுகர்வோர்கள் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.