கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவி: அதிமுக சார்பில் 9 பேர் விருப்ப மனு


கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு, போட்டியிட அதிமுகவினர் 9 பேர் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர்.     கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான விருப்பமனு தாக்கல், அமைச்சர் செந்தூர்பாண்டியன் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.விருப்பமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் அதிமுக சார்பில் 9 பேர் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதன் விவரம்:

      மருத்துவர் சஞ்சீவி (மாவட்ட மருத்துவரணித் தலைவர்),கிட்டுராஜா (நகரச் செயலர்), முகமது மைதீன் (ஜெ.பேரவைச் செயலர்), முகையதீன்பிச்சை  (ஜெ.பேரவை துணைத் தலைவர்),அமானுல்லா (வார்டு பிரதிநிதி),சுப்பிரமணியன் (முன்னாள் வார்டு செயலர்),பரக்கத் நிஷா (இளம்பெண்கள் பாசறை), கமாலுதீன் (ஜெ.பேரவைத் தகவல் தொடர்பாளர்), முத்துலட்சுமி (அதிமுக உறுப்பினர்).

கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு: இதற்கிடையே கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதன் காரணமாக விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ள பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடையநல்லூர் தொகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்

கடையநல்லூர் தொகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப், பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை அமைச்சர் செந்தூர்பாண்டியன் இன்று (16ம் தேதி) வழங்குகிறார். தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி போன்றவற்றை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட இந்த திட்டத்தினை தொடர்ந்து கடையநல்லூர் தொகுதியில் அமைச்சர் செந்தூர்பாண்டியன் பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்குகிறார். இன்று (16ம் தேதி) காலை 10 மணிக்கு கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி இ.மசூதுராவுத்தர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்குகிறார். மாவட்ட கலெக்டர் செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார். கல்வித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து கடையநல்லூர் யூனியன் கம்பேரி பஞ்.,சிற்குட்பட்ட கனகசபாபதிபேரி கிராமத்தில் 168 பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி திட்டத்தினை துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அதிமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.