கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

கடையநல்லூர் அருகே கிணற்றில் விழுந்த பசு


கடையநல்லூர் அருகே 60அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்டனர்.

கடையநல்லூர் அருகேயுள்ள கருப்பாநதி அணையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் கலா என்ற பெண் பசுமாட்டை கட்டிவிட்டு வயல் வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது கட்டப்பட்ட கயிறு அவிழ்ந்த நிலையில் அப்பகுதியிலிருந்து சென்ற பசுமாடு அங்கிருந்த 60அடி ஆழம் உள்ள கிணற்றில் திடீரென விழுந்துவிட்டது. மாடு கிணற்றில் விழுந்ததால் அப்பகுதியில் இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து கடையநல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) மாரியப்பன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கிணற்றில் சிக்கி தவித்து போராடிக் கொண்டிருந்த மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதியில் இருந்த விவசாயிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.

கடையநல்லூரில் பரவும் மர்மக் காய்ச்சல்

கடையநல்லூர் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்தும்,அவர்கள் எவ்வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் 30 பேர் கொண்ட குழுவின் மூலம் ஏப்.9(திங்கள்கிழமை) முதல் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரான்மைதீன் சனிக்கிழமை தெரிவித்தார்.


கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் 4 பேர் மட்டுமே காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கும் சாதாரண வகை காய்ச்சலே ஏற்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி பகுதியிலுள்ள மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.


இதில் டையநல்லூரைச் சேர்ந்தவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும் கடையநல்லூர் பகுதியில் முன் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து புகை அடிக்கப்பட்டு வருகிறது.  மேலும் அபேட் மருந்தும் ஊற்றப்பட்டு வருகிறது. சனிக்கிழமை நகராட்சி துப்புரவு ஆய்வாளர்களுடன் கடையநல்லூர் பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் அவ்வாறு காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.


விழிப்புணர்வு பிரசாரம்: கடையநல்லூரில் கடந்த ஆண்டில் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதன் காரணமாக சாதாரண காய்ச்சலுக்கே மக்கள் அச்சப்படுகின்றனர். இதைப் போக்கும் வகையில் சுகாதாரத் துறை மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதுவரை எடுத்த ரத்த மாதிரிகளில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 33 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

தமிழகத்தில், 2012 ஏப்ரல் 9 வரை, 33 நபர்கள் இந்த நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. சென்னை கோவை, திருப்பூர் மற்றும் சில மாவட்டங்களில் தற்போது இந்நோய் காணப்படுகிறது.  இதில் சென்னையில் 18 பேரும், கோவையில் 11 பேரும், திருப்பூர், கடலூர், திருவள்ளுர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இத்தகவலை தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில்,
பன்றிக்காய்ச்சல்  நோய்க்கு ஆய்வக பரிசோதனை
பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகப்படும் நபரின் சுவாச மண்டலத்தில் இருந்து தொண்டை தடவல்  மாதிரிகள் சேகரிக்கப்பட்டு RT - PCR எனும் பரிசோதனை மூலமாக இந்நோய் உறுதிப்படுத்தப்படுகிறது. கிண்டி அரசு கிங் நிலையம், சென்னை,  மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக இப்பரிசோதனை செய்யப்படுகிறது.


மேலும் தமிழகத்தில் 12 தனியார் ஆய்வகங்களில்  இந்த பரிசோதனை செய்ய உரிய கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த பின்னர்  அரசு  அனுமதி வழங்கியுள்ளது.


பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மருந்து
பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இருப்பவர்கள்  அருகிலுள்ள மருத்துவரை அணுகி   ஆரம்ப நிலையிலேயே  கண்டறிந்து ஒசால்டாமாவீர் (டாமிப்ளு) மருந்துகளை உட் கொள்வதால் முழுமையாக இந்நோயை குணப்படுத்த முடியும். இதன் மூலம் இறப்பினை தவிர்க்கலாம். பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான ஒசால்டாமாவீர் (டாமிப்ளு) மருந்துகள் போதுமான அளவு (4 இலட்சம்) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான  சிரப் ஒசால்டாமாவீர் (டாமிபுளு) மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது.

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்களை வழங்குவதற்கான கால அவகாசம், ஏப்., 16ம் தேதியுடன் முடிகிறது



ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்களை வழங்குவதற்கான கால அவகாசம், ஏப்., 16ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்கள், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் வழங்கி வருகின்றனர். விண்ணப்பங்களை வழங்க, ஏப்., 16ம் தேதி கடைசி நாள். தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, "ரேசி டவர் எண்.13/7, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34 என்ற முகவரியிலோ அல்லது 044 - 2822 7617, 2825 2519, 2822 7617 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். இதுகுறித்து, ஹஜ் குழு அலுவலக ஊழியர் ஒருவர் கூறியதாவது: விண்ணப்பத்துடன், 2013ம் ஆண்டு வரை செல்லக்கூடிய பாஸ்போர்ட்டின் நகல் இணைக்க வேண்டும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், குலுக்கல் முறையில் இல்லாமல், நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர்; இவர்களுடன் ஒருவருக்கு அனுமதி உண்டு. தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு, 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத கடைசியில், குலுக்கல் நடைபெறுகிறது. ஒருமுறை பயணம் மேற்கொண்டவர்கள், ஐந்தாண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஐந்தாண்டுகளுக்குள், ஹஜ் பயணத்திற்கு முயன்றால், அவர்கள் பயணம் ரத்து செய்யப்படும்.

திங்கள், 2 ஏப்ரல், 2012

கடையநல்லுரை மீண்டும் ஆட்டுகிறது மர்மக்காய்ச்சல்

கடையநல்லூரில் எந்த ஊரிலும் இல்லாத மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது 


கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நெல்லையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது கடையநல்லூர் வாசிகள் குறைந்தது 10 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 ரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து உயிருக்கே உலை வைக்கிற அளவிற்கு இந்த காய்ச்சல் உள்ளதாக கூறுகிறார்கள்.

மேலும் ரத்த வங்கிகளில் ரத்தம் வாங்குவதற்கும் கஷ்டப்படுகிறார்கள் ரத்த தேவைகள் அதிகரித்துள்ளது இந்த காய்ச்சல் எதன் மூலம் பரவுகிறது என்பதை கண்டறிந்து இதை முற்றிலும் ஒழிக்க அரசு முன்வர வேண்டும் .

கடையநல்லூர் அருகே பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்து



கடையநல்லூர் அருகே பள்ளி வேன் மரத்தில் மோதியதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். தென்காசியில் மதுரை ரோட்டில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மேலகரத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் இன்று காலை பள்ளி வேன் மூலம் பள்ளிக்கு சென்றனர்.
 
வேனை ஆவுடையானூரை சேர்ந்த வேல்முருகன் ஓட்டினார். குத்துக்கல்வலசை அருகே செல்லும் போது திடீரென வேன் அங்குள்ள மரத்தில் மோதியது. இதில் வேனில் வந்த மாணவர்கள் இசக்கிமுத்து (வயது 15) உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
 
தகவல் அறிந்ததும் இலத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மாணவர்களை மீட்டு தென்காசி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையநல்லூர் நகராட்சியில் தனியார் துப்புரவு பணிக்கான கான்ட்ராக்டை நீட்டிக்க கோரிக்கை


கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தனியார் துப்புரவு பணிக்கான கான்ட்ராக்டர் பணி நிறுத்தப்பட்டு விட்ட நிலையில் சுகாதார பணிகளில் முடக்கம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காலதாமதமின்றி புதிதாக பணியாளர்கள் நியமனம் செய்யும் வரை தனியாருக்கான கான்ட்ராக்ட் காலத்தை காலநீடிப்பு செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நகராட்சியை பொறுத்தவரை 249 நபர்களுக்கு மூன்று துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டுமென்ற அடிப்படை இருந்தபோதிலும் தற்போது இந்நகராட்சியை பொறுத்தவரை 100 துப்புரவு பணியாளர்களுக்கு 88 பேர் தான் பணியில் உள்ளனர். 12 துப்புரவு பணியாளர்களுக்கான பணியிடம் தொடர்ந்து பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளது.

பணியாற்றும் 88 பேரில் மற்ற பிரிவுகளுக்கு சுமார் 10 பேர் வரை அனுப்பட்டு வருவதால் சுகாதார பணிகளில் 78 பேர் தான் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடையநல்லூர் நகராட்சியில் 45 ஆயிரத்து 456 ஆண்களும், 44 ஆயிரத்து 888 பெண்களும் மொத்தம் 90 ஆயிரத்து 343 பேர் குடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வார்டுகளை கொண்ட நகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட குடிசை பகுதிகளில் 24 ஆயிரத்து 528 பேர் வசித்து வருகின்றனர்.

இந்நகராட்சியை பொறுத்தவரை கழிவுநீர் கால்வாய்களின் மொத்த நீளமாக 99.20 கி.மீ. கணக்கிடப்பட்டுள்ளது. கட்டண கழிப்பிடங்கள் 5, உரக்கிடங்குககள் 2, ஆடறுப்பு மனைகள் ஒன்றும் அமைந்துள்ள நிலையில் நகராட்சியில் ரோடுகளின் மொத்த நீளம் 67.139 கி.மீ.தூரமாகும். 33 வார்டுகளில் 229 தெருக்கள் அமைந்துள்ள நிலையில் சுகாதார பணிகளுக்கு 33 தள்ளுவண்டிகளும், 2 மினிலாரிகளும், டிராக்டர், டம்பர் பிளேசர் ஆகியன தலா ஒன்றும், டம்பர் பிளேசர் தொட்டிகள் 48 எண்ணம் இப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையில் அதிகளவு பரப்பளவு கொண்ட நகராட்சியில் சுகாதார பணிகள் தடையின்றி மேற்கொள்ளும் வகையில் குறிப்பிட்ட சில வார்டுகள் தனியாருக்கு கான்ட்ராக்டர் மூலம் விடப்பட்டன. நகராட்சியில் 21வது வார்டிலிருந்து 31வது வார்டு வரையிலும் மட்டுமின்றி கிருஷ்ணாபுரத்திலிருந்து மின்வாரிய அலுவலகம் வரை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் துப்புரவு பணிகளை தனியார் மூலம் மேற்கொள்வதற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் சுமார் 7 ஆண்டுகளாக குறிப்பிட்ட வார்டு, தேசியநெடுஞ்சாலைகளில் தனியார் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனிடையில் கடையநல்லூர் நகராட்சியில் காலியாக கிடக்கும் துப்புரவு பணியாளர் பணியிடங்களை தாமதமின்றி நிறைவேற்றிட வேண்டுமென தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதனிடையில் கடந்த 31ம் தேதியோடு நகராட்சியில் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த தனியார் துப்புரவு பணி முடிவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து 33 வார்டுகளிலும் தற்போது பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை கொண்டுதான் பணிகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. காலியாக கிடக்கும் பணியாளர் இடங்களை நிரப்பிட நகராட்சி நிர்வாகம் துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இருந்தபோதிலும் தமிழகத்தில் அதிகமான அளவில் மர்ம காய்ச்சல் பாதித்த பகுதியாக கடையநல்லூர் நகராட்சி தொடர்ந்து காணப்பட்டு வரும் நிலையில் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் புதிதாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்யும் வரை சுகாதார பணிகளை குறிப்பிட்ட வார்டுகளில் மேற்கொள்ள தனியார் மூலம் கான்ட்ராக்ட் விடுவதற்கான காலக்கெடுவினை நீடிக்க செய்ய வேண்டுமென நகராட்சி பொதுமக்கள் சார்பிலும், முக்கிய அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.